TNPSC Thervupettagam

சுதந்திரச் சுடர்கள் 9

August 19 , 2022 720 days 455 0

இளவரசர்களை வழிக்குக் கொண்டுவந்த மன்னர்

  • மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பைப் போல அல்லாமல், இந்தியாவின் சுதேச சமஸ்தானங்களை இந்திய அரசுடன் இணைக்கும் வேலை படு சுறுசுறுப்புடன் நடந்தது.
  • காஷ்மீர், ஹைதராபாத், ஜுனாகட் (குஜராத்) ஆகிய சமஸ்தானங்களைத் தவிர ஏனைய சமஸ்தானங்கள் இந்திய நாட்டுடன் இணைய சம்மதித்துவிட்டிருந்தன.
  • இந்திய அரசின் தலைமையை ஏற்று, அதற்குக் கட்டுப்பட்டு நடப்போம் என்று உடன்படிக்கையில் கையெழுத்திட அனைத்து சமஸ்தானங்களும் ஒப்புதல் தெரிவித்துவிட்டிருந்தன. ராணுவம், வெளியுறவுத் துறை, தகவல் தொடர்பு ஆகியவை மத்திய அரசிடம் இருக்கவும் அவை சம்மதித்தன.
  • இந்த சமஸ்தானங்களை இந்திய ஒன்றிய அரசுடன் ஏதாவது ஒரு மாநிலம் வழியாக இணைக்கும் வேலையும் எளிதாக நடந்தது. சமஸ்தானங்கள் மீதான உரிமைகளை விட்டுக்கொடுத்து, இந்திய அரசுடன் இணைவோருக்கு மன்னர் மானியம் வழங்கப்பட அரசு ஒப்புக்கொண்டது.
  • இந்திய அரசமைப்புச் சட்டப்பேரவையுடன் இணைய மறுக்கும் சமஸ்தானங்கள் ‘விரோதி’ நாடாக கருதப்படும் என்று 1945 டிசம்பர் முதல் 1947 ஏப்ரல் வரையில் தொடர்ச்சியாக நடைபெற்ற அனைத்திந்திய மாநில மக்கள் மாநாடுகளில் இயற்றப்பட்ட தீர்மானங்களும் சுதேச மன்னர்களின் மனங்களில் கிலியை ஏற்படுத்தியிருந்தன.
  • சுதேச மன்னர்களுக்கு அளிக்கப்பட்ட நெருக்கடிகளால் இந்திய அரசுடன் சேர்வது விரைவடைந்தது. சர்தார் வல்லபபாய் படேலின் மிகப் பெரிய சாதனை இது. இந்திய அரசுடன் சேராமல் தனியரசாக இருந்துவிடலாம் என்று கருதிய மன்னர்களுடைய சமஸ்தானங்களில் மக்கள் இயக்கம் வலுவடைந்து, அந்த எண்ணத்தை மன்னர்கள் மாற்றிக்கொள்ள நேர்ந்தது.
  • திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவான் சர் சி.பி. ராமஸ்வாமி ஐயர் இந்த யோசனையை ஏற்க மறுத்தார். அதனால் புன்னப்புரா– வயலார் ஆயுதமேந்திய மோதல்கள் ஏற்பட்டன. இறுதியில் சமஸ்தானம் இணைந்தது. ஒடிசா மாநிலம் உள்பட பலவற்றில் – குறிப்பாக நீலகிரி, தென்கனால், தால்சேர் பகுதிகளில் சில பழங்குடிகள் தங்களுடைய தலைக்கட்டு சுதந்திரம் போய்விடும் என்பதற்காகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மைசூரு மகாராஜாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எடுத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு அவர் சம்மதம் தெரிவித்தார்.
  • ஹைதராபாதில் நிஜாம், தன் பிரதேசத்தை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்தார். காஷ்மீரத்தில் மன்னர் ஹரி சிங்கும் அதே போலவே காஷ்மீர் தனி நாடாக இருக்கும் என்றார்.
  • தேசிய மாநாட்டு கட்சியின் தலைமையில் திரண்ட காஷ்மீர் மக்கள், காஷ்மீரை விட்டு மன்னர் வெளியேற வேண்டும் என்று கிளர்ச்சி செய்தனர். குஜராத்தின் ஜுனாகட் பகுதியின் ஆட்சியாளர் பாகிஸ்தானுடன் சேர விரும்பினார். ஆனால், அப்பகுதி மக்களோ இந்தியாவுடன்தான் சேர வேண்டும் என்றனர் (ஜுனாகட் பிறகு சேர்ந்துவிட்டது).
  • ஹைதராபாத், காஷ்மீர் சமஸ்தானங்களை இணைக்கும் பொறுப்பு படேலுக்கு ஏற்பட்டது. ஹைதரா பாத்துக்கு படைகளை அனுப்பி 48 மணி நேரத்துக்குள்
  • நிஜாமைப் பணியவைத்தார் படேல். நிஜாமுக்கும் அவருடைய ரஜாக்கர்கள் என்ற சிறப்புப் படைக்கும் எதிராக மக்கள் கொண்டிருந்த வெறுப்பு தெலங்கானா போராட்டங்களில் எதிரொலித்தது. எனவே, படேல் எடுத்த நடவடிக்கைக்கு தார்மிக ஆதரவு கிடைத்தது.
  • 1946 முதலே காஷ்மீர் மன்னருடன் படேல் பேசிவந்தாலும், அவர் இந்தியாவுடன் சேருவதை எதிர்த்துக்கொண்டிருந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து துப்பாக்கியேந்திய தீவிரவாதிகள் வந்து காஷ்மீர் மீது திடீர் தாக்குதலை நடத்திய பிறகு, அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று உணர்ந்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் இணையும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இப்படியாக காஷ்மீர் பிரதேசமும் இந்தியாவுடன் சேர்ந்தது.

கோவையின் விடுதலைப் போராட்ட அடையாளம்

  • நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளில் முக்கியமானவர் கோவையைச் சேர்ந்த தி.சு. அவினாசிலிங்கம். இந்திய சுதந்திர போராட்டத்தின் வரலாற்றில் அவருக்கு முக்கிய இடம் உண்டு.
  • எளிமை, தூய்மை, தன்னலமற்ற சேவை, நாட்டுக்கு உழைத்தல், தியாகச் சிந்தனை ஆகியவை ஒருங்கே அமைந்தவர் அவினாசிலிங்கம். ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் இருந்த திருப்பூரில், 5-5-1903 அன்று கே.சுப்பிரமணியம் - பழனியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
  • அவருடைய தந்தை சிறந்த வணிகராக இருந்ததோடு, சொந்த வங்கி ஒன்றையும் அக்காலத்தில் நடத்திவந்தார். 5-ஆம் வகுப்புவரை திருப்பூரில் படித்து முடித்த பின்னர், கோவை லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். பின்னர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1920-23ஆம் ஆண்டுகாலகட்டத்தி்ல் பி.ஏ. பட்டப்படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். கோவையில் வழக்கறிஞராகப் பணிபுரிந்துவந்தார்.

மகாத்மாவுடன் நெருக்கம்

  • 1934 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் நலவாழ்வு நிதிக்காக நன்கொடை திரட்ட தமிழகம் வந்த காந்தியடிகளுக்கு ரூபாய் இரண்டரை லட்சம் நிதி திரட்டிக் கொடுத்தார். விடுதலைப் போராட்டத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட அவினாசிலிங்கம், 1941இல் நடந்த தனிநபர் சத்தியாகிரகம், 1942இல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவற்றில் பங்கேற்று 21 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.
  • ஆங்கிலேயர்களின் அடக்குமுறையையும், சிறைச்சாலைகொடுமைகளையும் தாங்கிக் கொண்டார். 1920இல் சென்னையில் படித்துக் கொண்டிருந்தபோது மகாத்மா காந்தியடிகளை முதன்முதலில் சந்தித்த அவினாசிலிங்கம், அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.
  • காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆங்கிலேய அரசின் உப்பு வரிக்கு எதிராக 1930 ஜூலை 5 அன்று ராகவாச்சாரியருடன் இணைந்து அவினாசிலிங்கம் கோவை வாலாங்குளத்தில் உப்பு காய்ச்சினார்.
  • ஆங்கிலேய அரசு இருவரையும் கைதுசெய்து கோவை மத்திய சிறையிலும், பின்னர் வேலூர் சிறையிலும் அடைத்தது. தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்துக்காக கோவை மாவட்டத்துக்கு வருகை தந்த காந்தியடிகளோடு அவினாசிலிங்கம் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பட்டிதொட்டி எங்கும் சென்று சுதந்திரப் போராட்டம் குறித்துப் பேசினார்.
  • கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மதராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினர், சுதந்திர இந்தியாவின் மதராஸ் மாகாணத்தின் முதல் கல்வி அமைச்சர், இந்தியக் குடியரசின் முதலாவது மக்களவையில் உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் போன்ற பல பொறுப்புகளை அவினாசிலிங்கம் வகித்துள்ளார்.
  • விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு கோவை, கடலூர், வேலூர், திருச்சி, மதுரை போன்ற பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தபோது பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘இந்திய பொருளாதாரம்’, ‘கல்வி’, ‘நான் கண்ட மகாத்மா’ உள்ளிட்டவை முக்கியமானவை. அனைவரும் கல்வி கற்க வேண்டும், குறிப்பாக பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகத் தீவிர முனைப்புடன் செயல்பட்டார். 1991 நவம்பர் 21 அன்று 88 வயதில் மறைந்தார்.

பாடநூலில் திருக்குறளைச் சேர்த்தவர்

  • அவினாசிலிங்கம் குறித்து புலவர் செந்தலை ந.கவுதமன் கூறுகையில்,‘‘ மத்திய, மாநில அரசுகளில் தி.சு. அவினாசிலிங்கம் அமைச்சராக இருந்துள்ளார். அவர், கல்வி அமைச்சராக இருந்த வேளையில் பாடநூலில் திருக்குறளை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்புவரை பாடநூல்களில் திருக்குறள் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.
  • நாட்டிலேயே முதன்முதலாக ‘தமிழ் கலைக் களஞ்சியம்’, ‘சிறுவர் கலைக்களஞ்சியம்’ உருவாக்குவதற்கான முழு முயற்சியை மேற்கொண்டார்.
  • போத்தனூரில் அவர் நிறுவிய ராமகிருஷ்ணா வித்யாலயாவுக்கு அடிக்கல் நாட்டியவர் காந்தியடிகள். ராமகிருஷ்ணா வித்யாலயா முதலில் போத்தனூரிலும், பின்னர் ரேஸ்கோர்ஸிலும், தொடர்ந்து பெரிய நாயக்கன்பாளையத்துக்கும் மாற்றப்பட்டு இன்றுவரை இயங்கிருகிறது. தொடர்ந்து மனையியல் கல்லூரியும், பல்கலைக்கழகமும் உருவாகின,’’ என்றார்.

குற்றங்களைக் களையும் ‘குலாபி கேங்’

  • பெண்களின் பொறுமை எல்லை கடந்தால் என்னவாகும் என்பதற்கு விடையாக அமைந்தது ‘குலாபி கேங்’. உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் உள்ள பதௌசா கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் பால் தேவி.
  • பெண்கள் மீதான வன்முறை, குழந்தைத் திருமணம், ஆள் கடத்தல் என்று பல்வேறு குற்றச் செயல்கள் மலிந்திருக்கும் மாநிலத்தில் பெண்கள் பெற்றுள்ள எழுத்தறிவு விகிதமும் குறைவு. சாதி வேறுபாடுகளும் அதன் காரணமாக நிகழும் ஒடுக்குமுறையும் அதிகமுள்ள இடத்தில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்குக் குறைவில்லை.
  • தன் மனைவியை அடித்துக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்த சம்பத் தேவி அதைத் தடுக்க முயன்றார். ஆனால், அந்த ஆண் சம்பத் தேவியையும் சேர்த்துத் தாக்கினார். மறுநாள் ஐந்து பெண்களுடன் கையில் மூங்கில் கழியோடு வந்த சம்பத் தேவி, அந்த நபரைத் தாக்கினார். இந்தச் செய்தி காட்டுத்தீ போல் அந்தப் பகுதியில் பரவியது. தங்களுடைய கணவருக்கும் அதேபோன்ற தண்டனையைத் தரும்படி சம்பத் தேவியை பெண்கள் பலர் அணுகினர். சம்பத் தேவியுடன் இணைந்து செயல்படப் பலர் விரும்பினர்.
  • தன்னுடன் குழுவில் இணைந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் தங்களுக்கென்று தனி அடையாளம் இருக்க வேண்டும் என சம்பத் தேவி முடிவெடுத்தார். சகோதரத்துவத்தையும் பெண்களின் ஆற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் இளஞ்சிவப்பு நிறச் சேலை சீருடையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது. 2006இல் ‘குலாபி கேங்’ என்கிற பெயருடன் செயல்படத் தொடங்கினர்.
  • அகிம்சை கைகொடுக்காத இடங்களில் கையில் ஆயுதமேந்த இவர்கள் தயங்குவதில்லை. பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கபட்ட பெண்ணுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய வர்களைக் காவல்துறை கைதுசெய்தது. காவல் நிலையத்துக்குள் அதிரடியாக நுழைந்த ‘குலாபி கேங்’ பெண்கள், கைது செய்யப்பட்டவர்களை மீட்டதுடன் பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்கியவர்கள் மீது புகார் பதிவுசெய்ய வலியுறுத்தினர். பெண்கள் பொருளாதாரரீதியாக முன்னேற்றம் அடையும் வகையில் குடிசைத் தொழிலில் ஈடுபடவும் இந்தக் குழு வழிகாட்டுகிறது. சுயஉதவிக் குழுக்கள் அமைக்கவும் உதவுகிறது. 

ஆளுமை துணிச்சல் என்றால் போஸ்

  • சுபாஷ் சந்திர போஸ் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் இ.எஃப். ஓட்டன் இனவாதக் கருத்துகளைச் சொல்லி, இந்தியர்களைத் தரம் தாழ்த்திப் பேசினார். இதை போஸும் நண்பர்களும் எதிர்த்தனர்.
  • இதன் காரணமாக இரண்டு ஆண்டு படிப்பைத் தொடர இயலாத நிலைக்கு போஸ் தள்ளப்பட்டார். பிறகு படிப்பதற்காக இங்கிலாந்து சென்றிருந்தவர், ஜலியான்வாலா பாக் படுகொலையை அறிந்ததும் இந்தியா திரும்பினார்.
  • காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் பணியாற்றினார். 1930இல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.
  • பின்னர் ஐரோப்பாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அதை நல்லவிதமாகப் பயன்படுத்த முடிவுசெய்து, வெளிநாடுகளில் பல்வேறு இடங்களில் இந்திய விடுதலைக்கான மையங்களை நிறுவினார். இதனால் அவர் இந்தியாவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தபோது, போஸுக்கான தடை நீங்கியது.
  • காங்கிரஸ் கட்சியில் போஸின் செல்வாக்கு அதிகரித்தது. அதிரடிப் போக்கு கொண்ட போஸ், துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைத்தார். ஒருகட்டத்தில் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் போஸின் போக்குக்கு எதிராக இருந்தனர். 1939இல் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தலில் இரண்டாவது முறையாக போஸ் போட்டியிட்டார்.
  • அவரை எதிர்த்து பட்டாபி சீதாராமய்யாவை காந்தி நிறுத்தினார். 1,580 வாக்குகள் வித்தியாசத்தில் போஸ் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்தார். காந்திக்காகத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய போஸ், ‘அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி'யை ஆரம்பித்தார்.
  • இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் ஆதரவை பிரிட்டன் கேட்டது. இதை எதிர்த்த போஸ், ஜெர்மனியையும் ஜப்பானையும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதனால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
  • சிறையில் உண்ணாவிரதம் இருந்ததால், அவர் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, கண்காணிப்பில் வெளியில் விட்டது ஆங்கிலேய அரசு. 1941இல் இரவு கண்காணிப்பைத் தாண்டி மாறுவேடத்தில் போஸ் தப்பிச் சென்றார்.
  • ஜப்பான் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களைத் திரட்டி, பிரிட்டனுக்கு எதிராகப் போராட எண்ணினார்.
  • 1943இல் பர்மாவிலிருந்து இந்தியாவை நோக்கிப் படைகளை அனுப்பினார். அவருடைய 'ஜான்சி ராணி' பெண்கள் படைக்கு கேப்டன் லட்சுமி சாகல் தலைமையேற்றார். போஸின் படைகளால் பிரிட்டன் படையை எதிர்கொள்ள முடியவில்லை.
  • இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியைத் தழுவியதை அடுத்து, இந்திய தேசிய ராணுவத்தை மேற்கொண்டு வழிநடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. 1945 ஆகஸ்ட் 18 அன்று 48 வயதில் விமான விபத்தில் போஸ் மறைந்ததாக அறிவிக்கப்பட்டது.

கலை: மக்களிடம் வந்த நாடக அரங்கு

  • சுதந்திர இந்தியாவில்தான் நாடகம் தன் மரபுத் தளைகளை உடைத்துப் புதிய பாணியில் பார்வையளர்களிடம் நெருங்கி வந்தது. சமூகக் கருத்துகள், நவீன வாழ்க்கை போன்றவை நாடகங்களில் வெளிப்படத் தொடங்கின.
  • டச்சு நாடகக் கலைஞரான யூஜெனியோ பார்பா தொடங்கிய மூன்றாம் நாடக அரங்கு (Third Theatre) இயக்கத்தை உத்வேகமாகக் கொண்டு இந்தியாவில் புதிய நாடக பாணி உருவானது.
  • நாடக முன்னோடிகளில் ஒருவரான பாதல் சர்கார், புதுமையான நாடக வடிவத்தின் தேவையை உணர்ந்தார். மரபான மேடை நாடகங்கள் உச்சத்தில் இருந்த காலத்தில், அதை விட்டுவிட்டு பரிசோதனை முயற்சிகளில் அவர் இறங்கினார்.
  • யூஜெனியோ பார்பா, போலந்து நாடக முன்னோடி ஜெர்சி க்ரோடோவ்ஸ்கி ஆகியோரை உந்துதலாகக் கொண்டு இந்தியாவுக்கு ஏற்ற ஒரு நவீன நாடக பாணியை அவர் உருவாக்கினார்.
  • அதுவே மூன்றாம் நாடக அரங்கு. வீதி நாடகம், மனித நாடக அரங்கு என்கிற பெயர்களிலும் இது அழைக்கப்படுகிறது. மரபான நாடக வடிவத்தை முதல் அரங்கம், மேடை நாடகத்தை இரண்டாம் அரங்கம் எனக் கொள்வதால் மேடைகள், மரபுகளற்ற புதிய வடிவம் மூன்றாம் அரங்கம் எனப் பெயர் பெற்றது.
  • பார்வையாளர்களுக்கு அருகிலும் பார்வையாளர்களைச் சுற்றிலும் பார்வையாளர்களை சேர்த்துக்கொண்டும் நிகழ்த்தப்படுவதால், இதை மனித அரங்கு என்றும் சொல்லலாம்.
  • கிரேக்கத்தில் அடிமையாக்கப்பட்டிருந்த ஸ்பார்டகஸின் கதையை அடிப்படையாகக் கொண்டு பாதல் சர்கார் எழுதிய மூன்றாம் அரங்கத்துக்கான நாடகம் முக்கியமானது.
  • மேடை நாடகங்களில் முகபாவங்களைக் காட்டிலும் குரலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், பார்வையாளர்களுக்கு அருகில் நிகழ்த்தப்படும் இந்த நாடகத்தில் உணர்ச்சிகளை நெருக்கமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இருந்தது.
  • பார்வையாளர்களையும் நாடகத்தின் ஓர் அம்சமாக மாற்றிக்கொள்ள முடியும். மரபான நாடகப் பாணியிலிருந்த இடைவெளி இந்தப் புதிய பாணியில் களையப்பட்டது. நாடகம் மக்கள்மயப்படுத்தப்பட்டது.
  • பாதல் சர்காரின் இந்தப் பாணி இந்திய நாடகத் துறையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் புதிய பாணிக்கான பயிலரங்குகளை பாதல் சர்கார் நடத்தினார். தமிழ் நவீன நாடகத்தில் பாதல் சர்கார் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
  • அரங்கு, பொருள்கள், மைக், தொழில்நுட்பக் கருவிகள் போன்ற யாவுமின்றித் தமிழ்நாட்டில் உருவான சமூகக் கருத்துகள் மிக்க வீதி நாடகங்களுக்கு இதுவே உந்துதலாக இருந்தது.

நன்றி: தி இந்து (19 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்